அ கா பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் நகரிலிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பறக்கை என்னும் செழிப்பான கிராமத்தில் பிறந்தவர் (1947) இந்த ஊர் குளங்கள் தோட்டங்கள் வயல் வெளிகள் நிரம்பியது இங்கே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் உள்ளது முற்காலப் பாண்டியர் காலத்தில் சதுர்வேதிமங்கலமாக இருந்த அபிதான மேரு சதுர்வேதிமங்கலம் என்ற பெயரைப் பெற்றிருந்த இந்த ஊரில் 19 க்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன
பெருமாளின் ஒன்பது வயது வரை பறக்கை கிராமம் கேரளத்துடன் இருந்தது அப்போது இது மின்சாரம் போக்குவரத்து என்ற வசதிகள் இல்லாத கிராமமாக இருந்தது இக்காலகட்டத்தில் இந்த ஊர் கோவிலில் மலையாள மரபுவழி கலைகளும் நாட்டார் கலைகளும் நடந்திருக்கின்றன இந்த ஊரை தேடி தோல்பாவைக்கூத்து கழைக்கூத்து போன்ற கலைகளை நிகழ்த்திய கலைஞர்களும் சித்தோசி, ராப்பாடி போன்ற யாசகர்களும் வந்திருக்கின்றனர் இந்த பசுமையான அனுபவங்களைப் பெருமாளின் எழுத்தில் காணலாம்
பெருமாளின் தந்தை அழகம்பெருமாள்; இவர் பூர்வீகமாகவே இந்த ஊரைச் சார்ந்தவர் இவரது கொள்ளுத்தாத்தா 19 ஆம் நூற்றாண்டில் சுசீந்திரம் திருக்கோவிலில் ஸ்ரீகாரியமாக பணியாற்றியிருக்கிறார் இவர் மலையாள மொழியில் புலமை உடையவரும் கூட பெருமாளின் தாய் பகவதி அம்மா கடுக்கரை என்னும் மலையடிவார கிராமத்தில் பிறந்தவர் இவரது உறவினர்கள் பெரும்பாலும் திருவனந்தபுரத்தில் வாழ்ந்ததால் அங்கேயே வளர்ந்திருக்கிறார்
பெருமாளின் தந்தை பள்ளி இறுதி படிப்பு முடிந்ததும் திருவனந்தபுரத்தில் மலையாள பண்டிதர் படிப்பை படித்திருக்கிறார் அப்போது பறக்கை ஊர் பள்ளியில் மலையாளம் ஒரு பாடமாக இருந்தது. அவர் அங்கு சில மாதங்கள் வேலை பார்த்திருக்கிறார் பின்னர் பறக்கை ஊரை அடுத்திருந்த சுசீந்திரம் ஊரில் மலையாள பள்ளியில் மலையாள ஆசிரியராக இருந்திருக்கிறார் 50க்களின் ஆரம்பத்தில் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்தர்
பெருமாள் தன் ஆரம்பப் படிப்பை பறக்கை ஊரிலும் உயர்நிலை பள்ளிப்படிப்பை சுசீந்திரம் ஊரிலும் முடித்தார் பின் புகுமுக வகுப்பு இளங்கலை வகுப்பு நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் நடந்தது பின் கொஞ்ச மாதங்கள் திருச்சி தினத்தந்தி பத்திரிகையில் நிருபராகப் பணி செய்தார் பின்னர் கேரளம் பாலக்காடு சித்தூர் அரசு கல்லூரியில் (அது கோழிக்கோடு பல்கலைக்கழகம்) முதுகலை வகுப்பு படித்தார் அங்கு பேராசிரியராக இருந்தவர் ஜேசுதாசன் ஆவார் இவர் நாவலாசிரியர் ஹெப்ஷீபா அவர்களின் கணவர் பேராசிரியர் ஜேசுதாசன் வையாபுரிப்பிள்ளையின் ஆய்வு மாணவர் அவரது சக ஆசிரியரும் கூட இவர் ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த புலமைமையுடையவர்
பெருமாள் 1972 முதல் 2007 வரை கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரியில் ஆசிரியராகப் பணி செய்தார் 1983-1987 ஆம் ஆண்டுகளில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார் இவரது ஆய்வு வழிகாட்டி தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் வே சிதம்பரநாதன் ஆவார். இவரது ஆய்வு தலைப்பு நாஞ்சில் நாட்டு வில்லிசை பாடல்கள் இந்த ஆய்வுக்காக தென்மாவட்டங்களில் 300 க்கு மேற்பட்ட கிராமங்களில் கள ஆய்வு செய்திருக்கிறார் அச்சில் வந்தனவும் வராதனவுமான 42 வில்லிசை பாடல்களை சேகரித்திருக்கிறார் இதே காலகட்டத்தில் டிப்ளமோ காந்திய தத்துவம் இந்தி பட்டயம் படிப்பு முடித்திருக்கிறார்
பெருமாள் 1972 முதல் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் வீட்டின் அருகே குடியிருந்தார் அவருடன் நெருங்கிய தொடர்பு உண்டு 1972- 2005 ஆம் ஆண்டுகளில் சுந்தர ராமசாமி வீட்டுக்கு வந்த தமிழ் எழுத்தாளர்கள் பலரைப் பார்த்திருக்கிறார் நா பார்த்தசாரதியிலிருந்து ஜெயமோகன் வரை முக்கியமான தீவிரமான எழுத்தாளர்களை சந்தித்திருக்கிறார் சுந்தர ராமசாமியுடன் கேரளத்தில் நடந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் திரைப்பட நாடக விழாக்களுக்கும் சென்றிருக்கிறார் ஆற்றூர் ரவிவர்மா எம்.டி.வாசுதேவன் நாயர் சச்சிதானந்தம் மாதவிக்குட்டி என பல எழுத்தாளர்களை சந்தித்திருக்கிறார் பெருமாள் எழுத்தாளர் ஜெயமோகனின் நெருங்கிய நண்பர்
கல்லூரியில் வேலை பார்க்கின்ற போது பல முறை பல்கலைக் கழக மானிய நிதி உதவி பெற்றிருக்கிறார் இதனால் தமிழகத்தின் பல இடங்களிலும் கள ஆய்வு செய்திருக்கிறார் ஓய்வு பெற்ற பின்னர் செம்மொழி மத்திய நிறுவனம் வழி நிதி உதவி பெற்று அறிக்கை தயாரிக்க தென் மாவட்டங்களில் பல கிராமங்களுக்கு சென்று இருக்கிறார்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இவருக்கு தமிழக நாட்டார் கலைகளை விரிவாக ஆய்வு செய்ய நிதி நல்கியது அதற்காக மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நாட்டார் கலைகளைப் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருக்கிறார் இவை தவிர தமிழ் வளர்ச்சிக் கழகம் லண்டன் பொருளாதாரப் பள்ளி மங்களூர் மாத்தியம் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானம் போன்றவற்றிலும் இவர் நிதி உதவிபெற்று புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பெருமாள் கன்னியா குமரிமாவட்ட கிராமியக் கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சங்கத்தையும் (1986) தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சங்கத்தையும் (1984) ஆரம்பித்தார் இந்த இரண்டு சங்கங்களிலும் இவர் இப்போதும் ஆலோசகராக இருக்கிறார் இந்தக் கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக தமிழகக் கலைஞர்கள் சங்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்
கல்வெட்டியல் அறிஞர் செந்தீ நடராசனுடன் செம்பவளம் ஆய்வுத் தளம் என்ற ஆய்வு நிறுவனத்தை நிறுவினார் இந்த நிறுவனம் வழி கன்னியாகுமரி மாவட்ட கல்வெட்டுகள் செப்பேடுகள் ஓலைச் சுவடிகள் போன்றவற்றை தேடி சேகரித்து பதிவு செய்திருக்கிறார் தமிழக தொல்லியல் கழகத்தின் செயற்குழு உறுப்பினராக தொடர்ந்து 16 ஆண்டுகள் இருக்கிறார்
ஆரம்பகாலத்தில் இவர் கைவிளக்கு , புதுமைத் தாய், தினமணிக்க்கதிர் , கல்கி ,சிந்தனை மலர் ,தினமணி , பத்தி விகடன் ,மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகளில் எழுதினார் யாத்ரா ,கொல்லிப்பாவை , சதங்கை போன்ற சிற்றிதழ்களிலும் எழுதினார் காலச்சுவடு ,காவ்யா , உயிர்மை உங்கள் நூலகம் ,காக்கை சிறகினிலே , மானுடம் ,காமதேனு , தீராநதி , தடம் போன்ற இதழ்களிலும் எழுதிவருகிறார் அண்மைக்காலத்தில் இவரது கட்டுரைகள் தமிழ் இந்துவில் தொடர்ந்து வருகின்றன 2022 வரை இவர் எழுதிய கட்டுரைகள் 360 அளவில் உள்ளன.
பெருமாள் அடிப்படையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் என்றாலும் கல்வெட்டியல் சிற்பவியல் போன்றவற்றிலும் ஈடுபாடுஉடையவர்|இவர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து எழுதி வருகிறார் இவரது முதல் நூல் நாட்டார் கதைகள் இன்று வரை (2022) இவர் எழுதியவை 93 நூற்கள் இவற்றில் 16 நூல்கள் பதிப்பித்தவை இவரது புத்தகங்களை காலச்சுவடு நீயூ செஞ்சி புக் ஹவுஸ் காவ்யா ஆகிய பதிப்பகங்கள் வெளியிடுகின்றன இவரது ஒரு நூல் ஆங்கிலத்திலும் 3 கட்டுரைகள் பிரஞ்சிலும் ஒரு கட்டுரை மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
இவர் கேரளம் கர்நாடகம் தமிழகம் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் நடந்த கருத்தரங்குகளில் பங்கு கொண்டு கட்டுரை படித்திருக்கிறார் 20 22 வரை இவர் படித்த கட்டுரைகள்99 ஆகும்.
தமிழக அரசு இவருக்கு சிறந்த நூலாசிரியர் விருதை இரண்டு முறை வழங்கியுள்ளது (2004, 2005) இது தவிர வேறு பல அமைப்புகளும் பொது நிறுவனங்களும் இவருக்கு விருதும் பாராட்டும் வழங்கியுள்ளன இவர் தமிழகம் கேரளம் அகில இந்திய வானொலியிலும் தொலைக்காட்சி நிலையங்களிலும் நாட்டார் வழக்காறுகள் கோவில் கட்டுமானம் சிற்பங்கள் பற்றி உரை நிகழ்த்தியிருக்கிறார்
இவரது நூல்களில் ஆய்வுக் கட்டுரைகள் , தமிழ் இலக்கிய வரலாறு மனோன்மணியம் சுந்தரனார் ,பொன்னிறத்தாள் கதை ,சுண்ணாம்பு கேட்ட இசக்கி ,தமிழக வரலாறும் பண்பாடும் நூல்கள் கேரளம் தமிழகம் தில்லி போன்ற பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாய் உள்ளன இவரது தமிழக வரலாறும் பண்பாடும் என்ற நூல் TNPSC தேர்விற்கு மேற்கோள் நூலாய் உள்ளது
இவரது மனைவி தேவகுமாரி, ஒரே மகள் ரம்யா.