தமிழ் அறிஞரும் தமிழ் கீர்த்தனைகள் பல எழுதியவரும் ஆகிய பெரியசாமி தூரன் பெயரில் கரசர் பத்ம பாரதிக்கு சிறந்த இனவரைவியல் நூல் எழுதியமைக்கு விருது வழங்கும் விழா ஈரோடு கவுண்டச்சிட்பாளையம் ( சென்னிமலை சாலை) ராஜ் மஹால் கல்யாண மண்டபத்தில் 14-8-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இவ்விழாவின் காலை நிகழ்வில் (காலை 10 மணி முதல் 12.30 வரை) நாட்டார் வழக்காற்றியல் செய்தி தொடர்பான கேள்விகளுக்கு அ.கா. பெருமாள் பதில் அளித்தார். நாட்டார் வழக்காற்றில் வகைமைகளில் பதிவு செய்யப்படாத விஷயங்கள் பற்றி நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. எதிர்காலத்தில் என்ன இதற்கு வாய்ப்பிருக்கும் என்பதுபற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு நிதானமாகவும் விரிவாகவும் பெருமாள் பதிலளித்தார். இந்த கூட்டத்தில் கேள்வி கேட்டவர்களில் பலர் பெருமாளின் நூல்களை ஆழமாகப் படித்தவர்கள் என்பது அவர்களது பேச்சில் தெரிந்தது.
இதே மண்டபத்தில் மாலையில் நடந்த விழாவிற்கு அ.கா. பெருமாள் தலைமை தாங்கினார். மலேசியாவைச் சார்ந்த ஆன்மீகவாதி பிரேமானந்தா சரஸ்வதி சுவாமி அவர்கள் சிறு உரையாற்றினார்கள். இந்த விழாவில் பெருமாள் கரசூர் பத்மபாரதிக்கு ஏன் தூரன் விருது வழங்க வேண்டும் இனவரைவியல் துறையிலேயே அவர் என்ன சாதித்து விட்டார் என்பதை விரிவாகப் பேசினார். பத்ம பாரதி எழுதிய நரிக்குறவர் , திருநங்கை ,ஒடுக்கப்பட்டவர்களின் மகப்பேறு மருத்துவம் என்னும் புத்தகங்கள் பற்றி விரிவாக பேசினார். தமிழ்ச் சூழலில் இந்த புத்தகங்களுக்கு என்ன இடம் என்பதை நுட்பமாக விளக்கினார். இனவரைவியல் துறையில் இவை என்ன இடத்தை பெற்றுள்ளன. அவற்றின் சிறப்பு என்ன என்பதை விளக்கமாகச் சொன்னார் இதன்பிறகு பத்ம பாரதிக்கு விருது கொடுக்கப்பட்டது.